தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான மிக்ஜான் புயலானது கடந்த இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களில் மிக கனமழையை கொட்டித்தீர்த்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிந்துவிட்டாலும், இன்னமும் சில இடங்களில் மழைநீர் வடியாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சைதாப்பேட்டையில் துரைசாமி கார்டன் தெருவில் வசித்து வந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள நிலையில், தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்துப்போலீஸார் மற்றும் மீட்புப்படையினர் படகு மூலம் கர்ப்பிணியை மீட்டனர். பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை அழைத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த தகவலை சென்னை போக்குவரத்து காவல்துறையே எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீஸாருக்கு பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயலானது ஆந்திராவில் இன்று பிற்பகலில் 12 மணி முதல் 2. 30 மணிக்குள் தீவிர புயலாக கரையை கடந்துள்ளது. சற்று நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கடந்தாலும், அது ஏற்படுத்திய தாக்கம் சென்னை மட்டுமல்லாது ஆந்திராவிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.