சென்னை அருகே சேதமடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை, மாதவரம் 200 அடி சாலையில் இருந்து பொன்னேரி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் சாலையை சீரமைக்க கோரி நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மாதவரம் சரக போக்குவரத்து காவல்துறையின் உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையிலான போக்குவரத்து போலீஸார், சொந்த செலவில் சாலையை சீரமைத்தனர்.
சேதமடைந்திருந்த சாலையில் உள்ள பள்ளங்களை காங்கிரீட் சிமெண்ட் கலவை மூலம் நிரப்பி அவர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் குண்டும் குழியுமான சாலை சீரானது. தங்களின் பணிச்சுமைக்கு இடையிலும் பொதுநலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாராட்டுகளை தெரிவித்தனர்.