சசிகலா விடுதலையாகி வந்து தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் வர உள்ள நிலையில், மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள மண்டபத்தில் தேமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பொது உறுப்பினர்கள், பூத் முகவர்கள், செயல்வீரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பூத் முகவர்கள் பட்டியலை அளித்தனர். பின்னர் மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்து சிறப்புறை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், “பொது நிகழ்வில் கலந்து கொண்ட முதல் மாவட்டம், முதல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். தொண்டர்கள் தான் ஆணிவேர். நாளைக்கு தேர்தல் வைத்தாலும் தயாராக உள்ளோம், தலைமை கழகத்தில் ஒரு வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
சென்னை, ஆவடி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் என 37 தொகுதிகளை விஜயகாந்த் எனது பொறுப்பில் வழங்கி உள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் 5 வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும், ஒவ்வொரு தெருவிலும் 5 பெண்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும், 234 தொகுதிகளிலும் பாடுபட வேண்டும், கூட்டணி இருக்கிறதா இல்லையா என்பதை தலைவர் முடிவு செய்வார். கூட்டணியில் இருப்பதால் பொறுமை காத்து கொண்டிருக்கிறோம்.
ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல் திமுக, அதிமுகவிற்கே இது முதல் தேர்தல். இதனால் யாரும் பெரிய ஆள் என நினைக்க வேண்டாம். எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தல் கணிப்பு கூறுகிறது. தேமுதிக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இப்போது வரை அதிமுக ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் தேமுதிக, பாஜக சின்னத்தை தமிழகம் முழுக்க கொண்டு சென்றவர் விஜயகாந்த்.
எனக்கு இரண்டு பணி ஒன்று விஜயகாந்தை காக்க வேண்டும். அவர் உருவாக்கிய கட்சியை சிறிதும் சரியாமல் காக்க வேண்டும். இந்த தேர்தலில் சட்டமன்றத்தில் எனது குரல் ஒலிக்க வேண்டும் என்றால் யாராலும் தடுக்க முடியாது. விஜயகாந்த் அனுமதி கொடுத்து ஆண்டவன் அருள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுவேன்.
ஒரு பெண் என்ற முறையில் ஒரு பெண்ணாக சசிகலா விடுதலையை வரவேற்கிறேன். ஜெயலலிதாவிற்காகவே வாழ்ந்தவர் சசிகலா, சசிகலாவுக்கு என்று தனி வாழ்க்கை கிடையாது.
அவர்களால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளார்கள். தற்போது அவரை வேண்டாம் என்று சொல்வது மனதுக்கு கடினமாக உள்ளது. அவரது விடுதலையை வரவேற்கிறேன். சசிகலா விடுதலையாகி வந்து தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும் என்று பெண்ணாக முழு ஆதரவு தருகிறேன்” என்றார்.