திருவேற்காட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்ய இருந்த மேடையருகே திடீரென பொதுமக்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து இன்று காலை போரூர் மேம்பாலம் அருகே பரப்புரையை துவக்கினார். அதேபோல் அம்பத்தூரில் பரப்புரை செய்யும் முதல்வர் திருவேற்காடு ,காடுவெட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த நிலையில் முதல்வர் உரை நிகழ்த்தவுள்ள மேடைக்கு அருகே உள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்காக வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் திடீரென குழந்தைகள், முதியவர் என குடும்பத்துடன் முதல்வர் தேர்தல் பரப்புரை செய்யும் மேடை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 'பட்டா வழங்கு பட்டா வழங்கு' என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில் மூன்று தலைமுறையாக இங்கு வசித்து வருவதாகவும், தாங்கள் வசித்து வரும் சர்வே எண்ணில் பலருக்கு பட்டா வழங்கியுள்ள நிலையில் தங்களுக்கு மட்டும் பட்டா வழங்கவில்லை.
இதற்காக பல போராட்டங்கள் நடத்தி வருகிறோம். தற்போது எந்த இடையூறும் இல்லாத தங்கள் நிலத்தை அரசு இடிக்கவுள்ளது. தங்கள் வீடுகளை இடித்தால் ஆதர்கார்டு, ரேஷன், வாக்காளர் அட்டை என அனைத்தையும் தீயிட்டு கொளுத்தி தாங்களும் தற்கொலை செய்து கொள்வோம் என எச்சரித்துள்ளனர்.