பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏற்படும் வாகன நெரிசலில் சிக்கி, கொளுத்தும் வெயிலில் காய்ந்தபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
சென்னை மாநகரின் முக்கிய நுழைவாயிலாக இருப்பது பூந்தமல்லி நெடுஞ்சாலை. குறிப்பாக வேலப்பன்சாவடி, வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதி முழுவதும் தரமான சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டது.
மேலும் குண்டும் குழியுமான சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும், பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வருவதால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்கள் இந்த சாலையில் சுங்கக் கட்டணம் பாதி மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது வேலப்பன்சாவடி முதல் வானகரம் வரை பழுதடைந்த சாலை சிமெண்ட் சாலையாக மாற்றப்பட்டாலும் சாலையின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மெயின் சாலையை மட்டும் சீரமைத்து விட்டு அருகிலுள்ள சர்வீஸ் சாலையை சீரமைக்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது கொளுத்தும் வெயிலிலும் மழையிலும் காய்ந்தபடி வாகன ஓட்டிகள் விரிவாக்க சாலையில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.