தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெற இருக்கிறது. தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் இந்த சர்க்யூட் அமைந்துள்ளது. ஆக.30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெற உள்ள இந்த போட்டியை பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் என்பவர், ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதியம் 1 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காவல் உதவி ஆணையர் சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று இரவில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.