சென்னை தியாகராயநகரில் வளர்ப்பு நாயை கடத்தியவர், அதனை மீண்டும் அதே இடத்தில் விட்டுச் சென்றார்.
சென்னை தியாகராயநகரில் வசித்து வரும் ஐ.டி ஊழியர் சரத், ஜாக்கி என பெயரிடப்பட்ட 5 வயது நாயை வளர்த்து வந்தார். குழந்தையைப் போல் பாசத்தைக் கொட்டி வளர்த்த நாய், திடீரென காணாமல்போனதால் சரத்தின் குடும்பம் அதிர்ந்துபோனது. வீட்டில் ஒரு உறவைப் போல் இருந்த அந்த நாயின் பிரிவு, அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியது. காணாமல்போன நாயை கண்டுபிடித்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அதிர்ச்சி செய்தியொன்று இடியாய் இறங்கியது.
அடையாளம் தெரியாத பெண் ஒருவரும், இளைஞரும் சேர்ந்து நாய்க்கு பிஸ்கட் கொடுத்து கடத்திச் சென்றது, காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. செய்வதறியாமல் திகைத்த சரத்தின் குடும்பம் காவல்துறையில் புகார் அளித்தது மட்டுமின்றி, ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஜாக்கி குறித்த செய்தியை பரப்பியது. ஊடகங்களிலும் இது செய்தியானது. அதன் விளைவாக நாயை கடத்தியவரே, அதே இடத்தில் அதனை விட்டுச் சென்றுவிட்டார்.
நள்ளிரவில் வளர்ப்பு நாய் ஜாக்கி வெளியே சுற்றித் திரிவதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள், அதனை பத்திரமாக சரத்தின் வீட்டுக்கு கூட்டிச் சென்றனர். இருப்பினும், சிசிடிவி காட்சியை கொண்டு நாயை கடத்தியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.