மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக ’கவாச் 2023’ என்ற பெயரில் சைபர் செக்யூரிட்டி ஹாக்கத்தான் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து 3,600 குழுக்களாக மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 100 குழுக்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பாக கலந்துகொண்ட மாணவர்களின் கண்டுபிடிப்பான, ‘கவாச் 360’ என்ற மொபைல் ஆப் முதல் பரிசைப் பெற்றுள்ளது.
சிசிடிவி உள்ள பகுதிகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இந்தச் செயலி மூலம், அது அருகில் இருக்கும் காவல் நிலையம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்துவிடும். அதேபோல, சிக்னலில் உள்ள சிசிடிவி கேமராக்களைத் திருட்டு வாகனங்கள் கடந்துசென்றால் அதுகுறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் இந்தச் செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்தச் செயலி தேசிய அளவில் முதலிடம் பிடித்து மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு சைபர் குற்றங்கள் நடைபெறுவதால், அவற்றை தடுப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இதை மனதில்கொண்டு, கல்லூரி மாணவர்கள் இணைந்து தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாக பயன்படுத்தி சைபர் குற்றங்கள் நிகழாமல் தடுக்க கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: கொலம்பியா| பல் பிடுங்கியதால் ரத்தக்கசிவு... சிறுமிக்கு நேர்ந்த துயரம்!