விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான கூடைபந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியொன்றின் கூடை பந்தாட்ட அணி கலந்து கொண்டது. இந்த அணியின் கேப்டனாக சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அபிநந்தனா என்ற மாணவியும் கலந்து கொண்டுள்ளார்.
மாணவி அபிநந்தனா போட்டியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து புறப்பட்டபோது திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் தான் போட்டியில் கலந்து கொள்வேன் எனக்கூறி மதுரை சென்றுள்ளார் அவர். அப்படியாக நேற்று போட்டியில் பங்கேற்ற அவர், ஊருக்கு திரும்ப தயாராகியுள்ளார். அதில் இன்று அதிகாலை விருதுநகரில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார் அவர். அங்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சிறிது நேரத்திலேயே மயங்கிய மாணவி அபிநந்தனா பயிற்சியாளரின் மடியில் சரிந்து விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அபிநந்தனாவின் உடலை பரிசோதித்துவிட்டு, அபிநந்தனா உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவி அபிநந்தானவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து திலகர் திடல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவி ஊர் திரும்பும் வழியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.