சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாடா கம்யூனிகேஷன் அலுவலகத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரின் முதல் மனைவி சேலத்தைச் சேர்ந்த கீர்த்தனா (35). இவர்களுக்கு ருத்திதா என்ற மகள் உள்ள நிலையில், இத்தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 2018-ல் பிரிந்துள்ளனர்.
சேலம் கீர்த்தனாவை பிரிந்தபின் கோயம்புத்தூர் பீளமேடு பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த கீர்த்தனா (32) என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு ரமேஷ் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு தனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளார். இரண்டு குழந்தைகளுடன் கடந்த 5 வருடமாக சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் வாடகை வீட்டில் ரமேஷூம் அவர் மனைவியும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சிறுமி ருத்திகா கடந்த 4 மாதமாக அடிக்கடி பொய் பேசியதாகக் கூறி அவரை ரமேஷின் இரண்டாவது மனைவி அடித்து சித்தரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியேறிய ருத்திகா, அதே பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மோட்டார் அறையில் தஞ்சமடைந்துள்ளார். இதைப்பார்த்த அந்த குடியிருப்பு பகுதியிலிருந்த பரீத் என்பவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் நொளம்பூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான பெண் காவலர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், மகளை காணவில்லை என ரமேஷ் காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரமேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் தலை, கை, தோள்பட்டை, வாய், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு காயங்கள் இருந்ததாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கை மகளிர் போலீசாருக்கு மாற்றிய நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வந்த சென்னை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் காஞ்சனா, மணிமாலா உள்ளிட்ட அதிகாரிகள் சிறுமியிடம் விசாரித்து வருகின்றனர். சித்தியின் கொடுமையால் சிறுமி இவ்வாறான முடிவெடுத்திருப்பாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.