சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி மக்கள் மனதில் ஏற்பட்ட எண்ண மாற்றங்கள், குடியிருப்புப் பகுதியையே வண்ணமயமாக மாற்றியுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வண்ணமயமாக மாறியுள்ளது. குப்பை கூளங்களும், கழிவு நீர் கசிவுகளுமாக அசுத்தத்துடன் சுகாதாரமற்று காட்சியளித்த இடம், அங்குள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் முன்னெடுப்பால் வண்ணமயமாகி வருகிறது. தூய்மையற்ற இடம் இப்போது சீர் படுத்தப்பட்டு, சிறுவர்கள் விளையாடும் இடமாக உருமாறியுள்ளது. இங்குள்ள சிறுவர்களின் கைவண்ணத்தில் சுவர்களில் சேகுவாராவும், கருத்துப்படங்களும், அழகிய காட்சிகளுமாக விரிகின்றன.
அசுத்தமான இடத்தை சுத்தமானதாகவும், அழகுமிக்கதாகவும் மக்கள் மாற்றி இருப்பது பற்றி சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்து கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு வந்து பாராட்டியதுடன், அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அந்த பகுதியில் எல்.இ.டி விளக்குகள் அமைத்து கொடுத்துள்ளனர். இப்பகுதி இளைஞர்களும் சிறுவர்களும் செய்துள்ள இந்த மாற்றம் அப்பகுதி மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
சிறுவர்கள், இளைஞர்களின் விளையாட்டுத் திறனையும், கற்பனையையும் வெளிப்படுத்த களம் அமைத்து கொடுத்து உறுதுணையாக நிற்கும் கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்கள், தங்கள் பகுதியை சுற்றி உள்ள மற்ற குடியிருப்பு பகுதிகளையும் தூய்மையாக மாற்றுவதற்கான முயற்சியை நம்பிக்கையொடு தொடக்கியுள்ளனர்.