இனி, சென்னையில் 40 கி.மீ.-க்கு மேல் வேகத்தில் வாகனம் ஓட்டினால் அபராதம்! அமலுக்கு வருகிறது நடைமுறை
புதிய தொழில்நுட்பத்தைக் கொண்ட நவீன கருவிகளை சென்னை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு, பெருநகர காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் வழங்கினர். பின்னர் பேசிய ஷங்கர் ஜிவால், “7 கோடி ரூபாய் மதிப்பிலான போக்குவரத்து அதிநவீன உபகரணங்கள், இண்டர்செப்ட் வெகிக்கில் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. வாகனத்தில் ஓவர் ஸ்பீடு செல்வது, தலைக்கவசம் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு போக்குவரத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தற்போது வாகனம் மூலமும் நடுவழியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கண்காணிப்பு கேமரா மூலமாக செல்லான்களும் வழங்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து விதிமுறை மீறலான அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிவதில் சிக்கல் இருந்தது. ஓவர் ஸ்பீட் பொறுத்தவரை இன்றுமுதல் 10 இடங்களில் ஸ்பீடு ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதில் மதுரவாயல், பாரிஸ் உள்ளிட்ட 10 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இன்னும் 20 இடங்களில் ஓவர் ஸ்பீடு கட்டுப்படுத்துவதற்காக ஸ்பீடு ரேடார் கருவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. போக்குவரத்து தொடர்பாக 12 குறும்படங்களும் இயக்குவதற்கு போக்குவரத்து சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஓவர் ஸ்பீட் தொடர்பாக வாகனங்கள் பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இரவில் 50 கிலோமீட்டர் வேகத்திலும் வாகனங்கள் இயக்க வேண்டும் என ஏற்கனவே இருந்த போக்குவரத்து நடைமுறை விதிகளை தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறுபவர்களுக்கு தானியங்கி கேமராக்கள் மூலமாக ஆட்டோமேட்டிக்காக இ செல்லான் அவர்களுடைய மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக சென்றுவிடும். மாநகரங்களில் பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இரவில் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்வது தொடர்பான ஆணை கடந்த 2003 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.
அதைதான் தற்போது போக்குவரத்து காவல் துறையால் படிப்படியாகச் செயல்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.