சென்னை மாநகரில் ஊரடங்கு உத்தரவால் சாலை விபத்துகள் வெகுவாக குறைந்திருப்பதாக பெருநகர போக்குவரத்து காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னையில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க நடப்பு ஆண்டின் துவக்கத்திலிருந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அதிக அளவிலான வழக்குகள் பதியப்பட்டன. இதன் காரணமாக சாலை விபத்துக்களில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் இதுவரை 212 உயிரிழப்புகள் குறைந்துள்ளன. சாலை விபத்துக்களில் கடந்த 2019-ஆம் ஆண்டு 04.05.2019 அன்றைய நிலவரப்படி 483 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நடப்பு 2020-ஆம் ஆண்டு 04.05.2020 அன்றைய நிலவரப்படி 271 உயிரிழப்புகள் மட்டும் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல்-2019 ஆம் ஆண்டு 115 உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இதற்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முக்கிய காரணமாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 100 உயிரிழப்புகள் குறைந்துள்ளன. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 1161 விபத்துக்கள் குறைந்துள்ளன.
சென்னை மாநகரில் சாலை விபத்துக்களை மேலும் குறைக்க, வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளையும், சட்டத்தையும் மதித்து, கடைப்பிடித்து, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.