மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் கடும் சேதத்தை சந்தித்தது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாலும், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாலும் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மழை ஓய்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட இடங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. தண்ணீர் தேங்கி இருந்த பகுதிகளில் மழைநீர் மெதுமெதுவாக வடியத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வீதிகளில் குவிந்து வருகின்றனர். அதேசமயம், அலுவலகம் செல்வோரும் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
திருவள்ளுவர் மாவட்டம் ஊத்துக்கோட்டை செல்லும் வழியில் காரணோடை பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் தாமரைபாக்கம் கூட்ரோடு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை செல்கின்றனர். ஆந்திரா மற்றும் தமிழக அரசு பேருந்துகளும் திருப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் 2 மணி நேரம் கூடுதல் நேரம் ஆகிறது
இப்படியாக பெருமழையில் சிக்கியோரை மீட்கவும் அவர்களுக்கு உதவவும் தொடர்ந்து பணிகளும் நடந்துவருகின்றன. அந்தவகையில் சென்னை பெருநகர காவல்துறை, பொதுமக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு பின்வரும் சென்னை பெருநகர கவல் உதவி மைய எண்களை அறிவித்துள்ளது.
அதன்படி
044 - 23452359,
044 - 23452360,
044 - 23452361,
044 - 23452377
மற்றும் GCP வெள்ளக் கட்டுப்பாட்டறை எண். 044 - 23452437
ஆகிய எண்களை மீட்புப்பணி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.