மாங்காடு அருகே ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தப்பட்டார். தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாங்காடு அடுத்த கோவூர், ராயல் நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமார் (48), இந்நிலையில் நேற்று மாலை (திங்கட்கிழமை) வீட்டிற்கு வந்த நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி சுரேஷ்குமாரை காரில் கடத்திச சென்றுள்ளனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுரேஷ்குமார் திருமணம் செய்து கொள்ளாமல் தனது பெற்றோருடன் வசித்து வருவதாகவும் தனக்கு சொந்தமான ஒரு வீட்டை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இந்த வீட்டை ஏற்கனவே சிலர் வாங்கி கொள்வதாக பேசிய நிலையில், நேற்று அமாவாசை என்பதால் முன்தொகை கொடுப்பதற்காக சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது இவர்களுக்கு நன்கு தெரிந்த நபர்கள் சுமார் 11 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி சுரேஷ்குமாரின் கை, கால்களை கட்டி காரில் கடத்திச் சென்றுள்ளனர். மேலும் அங்கு செல்லும்போது சுரேஷ்குமார் தங்களுக்கு ரூ.1 கோடி தர வேண்டும் என்றும் அதன் காரணமாக அழைத்துச் செல்வதாக அங்கிருந்த ஒருவரிடம் கூறிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து மாங்காடு போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து சுரேஷ்குமார் எங்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்துவரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து சொகுசு காரில் வந்த சிலரை போலீசார் கைது செய்து நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் பிடிபட்டவர்கள் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கள்ளக்குறிச்சிக்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக கடத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.