சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அதை அடுத்து ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக இரண்டாக பிளவு பட்டது. அதிமுக அம்மா அணி வேட்பாளராக டிடிவி தினகரன் நிறுத்தப்பட்டார். ஆனால் பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடகோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், பணப்பட்டுவாடா விவகாரத்தில், சிலர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பினர். மேலும், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள், எந்தவொரு சூழலையும் காரணம் காட்டி இதற்குமேல் இடைத்தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தக்கூடாது என அறிவுறுத்தினர்.