புதிய தலைமுறை மீதான வழக்குப்பதிவுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவையில் நடைபெற்ற வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மீது காவல்துறையினரின் வழக்குப்பதிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், புதிய தலைமுறை மீதான வழக்குப்பதிவுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் மனறத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், தமிழகத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கார்ட்டூனிஸ்ட் பாலா கூறுகையில், தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அவசர நிலையை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
“புதிய தலைமுறை மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இது குறிப்பிட்ட சேனலுக்கான போராட்டம் அல்ல, ஒட்டுமொத்த ஊடகத்துக்கான போராட்டம்” என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு என்டிடிவி ஆசிரியர் சீனிவாசன் ஜெயின் கண்டனம் தெரிவித்துள்ளார். வட்டமேசை விவாதத்தின் போது நிகழ்ந்த சம்பவத்துக்கு புதிய தலைமுறை பொறுப்பாகாது என்றும் ஊடகங்களை ஒடுக்குவது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார். வழக்கை புதிய தலைமுறை சட்டரீதியாக எதிர்கொள்ளும் போது ஊடகங்களின் ஆதரவு நிச்சயம் உண்டு என்றும் சீனிவாசன் ஜெயின் கூறினார்.
இதனிடையே, புதிய தலைமுறை மீதான வழக்குப்பதிவை கண்டித்து திருப்பூரில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.