ஊரடங்கு : கழுகுப் பார்வையில் சென்னையை அலசும் காவல்துறை..!

ஊரடங்கு : கழுகுப் பார்வையில் சென்னையை அலசும் காவல்துறை..!
ஊரடங்கு : கழுகுப் பார்வையில் சென்னையை அலசும் காவல்துறை..!
Published on

சென்னையில் ஊரடங்கு உத்தரவை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்காக ட்ரோன் கேமரா மூலம் காவல்துறை கண்காணித்து வருகிறது.

சென்னையில் ஊரடங்கை கண்காணிப்பதற்காக கழுகு பார்வையை கையில் எடுத்துள்ளது காவல்துறை. சென்னையின் முக்கிய பகுதிகளின் தெருக்களுக்குள் ரோந்து வாகனத்தில் சென்று வீட்டில் இருந்து மக்கள் வெளியே வருவதை தடுப்பது சிரமமாக இருப்பதால், "ட்ரோன்" கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்த ட்ரோன் கேமராக்கள் பெரும் உதவியாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற "ட்ரோன்" கேமராக்களின் வாடகை செலவு லட்சக்கணக்கில் இருக்கும் எனப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று பரவலை தடுத்து வரும் காவல்துறைக்கு உதவுவதற்காக, இலவச சேவையாக கொடுத்து உதவி உள்ளது இந்துஸ்தான் பல்கலைக்கழகம்.

சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தி வந்த 12 அதிநவீன "ட்ரோன்" கேமராக்களை சென்னை வடக்கு மண்டல காவல்துறைக்கு எந்த வாடகை பணமும் பெறாமல் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 12 "ட்ரோன்" பைலட்களையும் அனுப்பி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படாமல் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறைக்கு உதவ தொழில்நுட்ப வசதி தேவைப்படுவதால், அவர்களுக்கு ட்ரோன்களை கொடுத்து உதவியதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சென்னையில் 32 பகுதிகளுக்கு சுகாதாரத்துறையுடன் இணைந்து காவல்துறை சீல் வைத்துள்ளனர். இந்த பகுதிகளுக்குள் சென்று கண்காணிப்பது சிக்கலான ஒன்று என்பதால், அங்கு "ட்ரோன்" கண்காணிப்பை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளனர். 60 மீட்டர் 70 மீட்டர் உயரத்திற்கு ட்ரோன்கள் பறப்பதால் தெருக்களில் மக்கள் கூடாமல் கட்டுப்படுத்த முடிவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com