95 சதவீதம் காவல்துறையினர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, "தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள்" வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பாக பணிபுரிந்த ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் "தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை" வழங்கி கெளரவித்தார்.
சட்டம் ஒழுங்கு போலீசார், குற்ற பிரிவு போலீசார், போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சென்னை மத்திய குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை நுண்ணறிவுப்பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு, முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு, மோப்பநாய் படை பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, விபசாரத் தடுப்பு பிரிவு, காவலர் பயிற்சி மையம், சிறுவர் நல காவல் பிரிவு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை, தனிப்பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு ஆகிய காவல் பிரிவுகளில் பத்து ஆண்டுகள் துறைரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் சிறப்பாக பணியாற்றிய ஆண், பெண் உள்ளிட்ட 642 காவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. அவர்களில் 591 காவலர்களுக்கு இன்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
இந்த நிகழ்சியில் சென்னை காவல் தெற்குமண்டல கூடுதல் ஆணையர் கண்ணன், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் செந்தில் குமார், போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விருதுகளை வழங்கிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேடையில் பேசுகையில், "10 ஆண்டுகாலமாக எந்த தவறும் இழைக்காத காவலர்களுக்கு இன்று பதக்கம் வழங்கப்பட்டது. இதேபோன்று அனைத்து காவலர்களும் பணிபுரிய வேண்டும். காவல்துறையில் உயரிய பதவியில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து நிலை காவலர்களும் ஒன்றிணைந்து உழைத்தால்தான் காவல்துறைக்கு இன்னும் சிறப்பு பெயர் கிடைக்கும். கொரோனா சூழ்நிலையில் காவலர்கள் உடல்நலம் மட்டுமில்லாமல் மன உறுதியோடு பணியாற்ற வேண்டும்.
காவல்துறையில் 95 சதவீத பேர் கொரோனா தடுப்பூசி முதல் தவணை போட்டுள்ளனர். 52 சதவீதம் பேர் 2- வது டோஸ் போட்டுள்ளனர். மேலும், சென்னை மாநகரின் அனைத்து காவலர்களும் சிறப்பாக பணியாற்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்கவேண்டும்" என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டார்.