சென்னையின் புதிய காவல் கமிஷனராக கூடுதல் டிஜிபி சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. . சென்னையின் 108-வது காவல் ஆணையராக பதவியேற்கவுள்ள சங்கர் ஜிவால் குறித்து சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், 1990ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. சொந்த மாநிலம் உத்திரகாண்ட். பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், அதில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்திரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியில் புலமை பெற்றவர். சேலம் எஸ்பி, மதுரை எஸ்பி, மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவான மண்டல இயக்குனர், திருச்சி போலீஸ் கமிஷனர், உளவுப்பிரிவில் டிஐஜி மற்றும் ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ஆகிய முக்கியப்பதவிகளில் சங்கர்ஜிவால் பணியாற்றியவர். அயல்பணியாக மத்திய அரசில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த இவர் பின்பு தமிழகம் வந்து அதிரடிப்படை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். சிறந்தப் பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கம் பெற்றவர்.
இன்ஜினியரிங் படிப்பு முடிந்ததும் சங்கர் ஜிவால் செய்ல் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா), பெல் (பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்) நிறுவனத்திலும் சிறிது காலம் இன்ஜினியராக பணிபுரிந்தவர். அதன்பின்பு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். சென்னையின் 108-வது காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.