ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்த நிலையில் மதுவிற்பனை குறித்து பரவிய ‘லிங்க்’ தடை செய்யப்பட்டுவிட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் பொதுமுடக்கத்திற்கு இடையே அமல்படுத்தப்பட்ட தளர்வுகளின்படி, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மதுபான விற்பனை ஆன்லைனில் தொடங்கி விட்டதாகவும், அதற்காக இணையதள முகவரி இதுதான் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு லிங்க் தீயாய் பரவியது.
இது குறித்து தெரிவித்த டாஸ்மாக், ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கப்படவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் மதுபான விற்பனை தொடர்பாக வரும் ‘லிங்க்’ போலியானது என்றும் தெரிவித்தது. இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போலியான லிங்கை தடை செய்துள்ளனர்.