சென்னை அரும்பாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரும்பாக்கம் பகுதியில் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த தீபக் (31) - டாலி மேத்தா (28) தம்பதியினரும் அவர்களது நண்பரான முத்துகுமரனும் (25) கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, அருண் குமார் (28), சித்தார்த் (28), தீபக் ராஜ் (25) ஆகிய நபர்களையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பெங்களூர் விரைந்து சென்ற தனிப்படை போலீசார் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் சப்ளை செய்த பெங்களூருவைச் சேர்ந்த சந்தோஷ் (25), அந்தோணி ரூபன் (26), மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த அபித் கிளாப்டனின் (38) ஆகிய மூன்று நபர்களை நேற்று (23-11-2024) கைது செய்து அவர்களிடம் இருந்து 6 கிராம் மெத்தப்பெட்டமைன், கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை சென்னை அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து அரும்பாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ஆந்திராவை சேர்ந்த ஒருவர் மொத்தமாக மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளை வாங்கி வந்து டீலர்களுக்கு விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, போலீசார் வாடிக்கையாளர் போல் அவரிடம் பேசி தங்களுக்கு 1 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அந்த நபர் மாதவரம் வந்து வாங்க வேண்டும் என கூறியதன் பேரில் போலீசார் நேற்று இரவு மாதவரம் பேருந்து நிலையம் அருகே சென்று காத்திருந்துள்ளனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து பேருந்தில் போதை பொருளுடன் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 1 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர், அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (48) என்பதும் இவர் சென்னை பல போதைப்பொருள் ஏஜெண்ட்டுகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் விஸ்வநாதனிடம் இருந்து 1 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.