சென்னையில் பிச்சைக்காரர் போல தெரு தெருவாக சுற்றி வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்
சென்னை புறநகர் பகுதிகளான ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல், பள்ளிக்கரணை, சேலையூர் ஆகிய பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தொடர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அனீஸ் என்பவரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
முகமது அனீஸ் திருவான்மியூர் கடற்கரையில் பிச்சைக்காரர் போல படுத்து கிடப்பார். பிறகு மின்சார ரயிலில் ஏறி பரங்கிமலை செல்வார். அங்குள்ள தெருக்களில் பிச்சைக்காரர் போல சுற்றுவார். பிறகு எந்த வீடு பூட்டி கிடக்கிறதோ அந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் ஏறி குதித்து மறைந்து படுத்து கொள்வார். பூட்டிய வீட்டை திறக்க யாரும் வராத நிலையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விடுவார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் வந்தாலும் பிச்சைக்காரர் போல நடித்து தப்பி விடுவதை வழக்கமாக கொண்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர் கொள்ளையடித்த தங்க நகைகளை திருச்சியில் அவரது நண்பர் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்து 40 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். கைதான முகமது அனீஸிடம் ஆதம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.