தண்ணீர் கேன்களுக்கு பூட்டுப் போடும் சென்னைவாசிகள்!

தண்ணீர் கேன்களுக்கு பூட்டுப் போடும் சென்னைவாசிகள்!
தண்ணீர் கேன்களுக்கு பூட்டுப் போடும் சென்னைவாசிகள்!
Published on

வட மாநிலங்களைப் போல சென்னையிலும் தண்ணீர் கேன்களுக்கு பூட்டுப்போட்டு மக்கள் பாதுகாத்து வருகின்றனர்

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்து போனதால் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. அத்துடன் நிலத்தடி நீரும் சில இடங்களில் வற்றியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. சென்னைக்கு தண்ணீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையில் இருப்பதால் சென்னைக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மக்கள் தண்ணீருக்காக இரவு பகலாக கையில் குடங்களுடன் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வட மாநிலத்தில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் குடிநீர் திருட்டை தடுக்கும் வகையில், தண்ணீர் கேன்களை பொதுமக்கள் பூட்டி வைத்தது போல சென்னையிலும் தண்ணீர் கேன்களை மக்கள் பூட்டு போட்டு பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல் பகுதிக்கும், ஜாபர்கான் பேட்டைக்கும் நடுவே ஓடும் அடையாறு ஆற்றுக்கு மேலே மேம்பாலம் ஒன்று உள்ளது. அப்பாலத்தின் மீது கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப்பணிக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தவிக்கும் கட்டுமானபணியாளர்கள், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படி விலைக்கு வாங்கி 4 பெரிய டிரம்களில் தண்ணீரை சேகரித்து வைத்துள்ளனர். அவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள தண்ணீரை யாரும் திருடாமல் இருக்கவும்,  திருட்டை தடுக்கும் வகையிலும் தண்ணீர் கேன்களை இரும்பு சங்கிலிகளால் இணைத்து பூட்டுப்போட்டு பாதுகாத்து வருகின்றனர். இது குறித்து அங்கிருப்பவர்களிடம் விசாரித்தபோது, தண்ணீருக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவி வருவதால், பூட்டுப்போட்டு பாதுகாத்து வருவதாக தெரிவித்தனர்.

விலையுயர்ந்த பொருட்கள் திருடாமல் இருக்க பூட்டுப்போட்ட நிலைமை மாறி, தற்போது தண்ணீருக்கு பூட்டுப்போட்டு பாதுகாத்து வரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தங்கத்தின் விலைக்கு இணையாக தண்ணீரும் விற்கத் தொடங்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் பணம் கொடுத்தால் கூட தங்கம் கிடைத்துவிடும், ஆனால் தண்ணீர் கிடைக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. இனியேனும் தண்ணீரின் தேவையை  மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீரை சிக்கனமாக பயன்படுத்தியும், மழை நீர் சேகரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தியும் எதிர்காலத்தை வறட்சி இல்லாமல் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதே முக்கிய தேவையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com