அடுக்குமாடி கட்டிடத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் வட மாநில இளைஞர் ஒருவர் உயிரிழப்பு. மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. கட்டிட உரிமையாளர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை அமைந்தகரை, அய்யாவு காலனி பால விநாயகர் தெருவில் 2 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் பணியாளர்கள் வேலைப்பார்த்து கொண்டிருந்தபோது, இரண்டாவது மாடி தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் மேற்குவங்க மாநிலம் வர்தமான் மாவட்டத்தைச் சேர்ந்த நவ்ஷத் ஷேக் (32) மற்றும் மேற்குவங்க மாநிலம் முசிதாபாத் மாவட்டம் குஷ்முதீன்(36) ஆகிய இருவர்கள் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக சக பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து இடிபாடுகளில் சிக்கி இருந்த இருவரையும் மீட்டனர். இந்த விபத்தில் நவ்ஷத் ஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயங்களுடன் குஷ்முதின் மீட்கப்பட்டார்.
இதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த அமைந்தகரை போலீசார் ஈடுபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்த குஷ்முதினை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த இலவச நவ்ஷத் ஷேக் உடலானது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் நேரடி விசாரணையில் ஈடுபட்டார். அமைந்தகரை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த அடுக்குமாடி கட்டடமானது சூளைமேடு பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், செல்வகுமார் SCB கன்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதும் தெரியவந்தது.
மேலும், கடந்த 15 நாட்களுக்கு முன்பாக இரண்டாவது தளத்தின் மொட்டை மாடியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதும், இந்தநிலையில் இன்று காலை இரண்டாவது மாடியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவற்றில் துளையிட்டு சாரம் அமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
சாரம் அமைப்பதற்காக மொட்டை மாடி தடுப்புச் சுவற்றில் உளி கொண்டு பணியாளர்கள் துளையிட்டுக் கொண்டிருந்தபோது தடுப்புச் சுவர் எதிர்பாராத விதமாக அடியோடு பெயர்ந்து விழுந்துள்ளது. அப்போது கீழே பணிபுரிந்து கொண்டிருந்த நவ்ஷத் ஷேக் மற்றும் குஸ்முதின் ஆகியோர் மீது தடுப்புச் சுவரானது விழுந்து விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.
உயிரிழுந்த நவ்ஷத் ஷேக் மற்றும் குஸ்முதின் ஆகிய இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக பணிக்கு சேர்ந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளரான செல்வகுமார் மீது அமைந்தகரை போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயல் செய்தல் ஆகிய இரு பிரிவின் கீழ் அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுமான பணியின் போது தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் வட மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதும் மற்றொரு தொழிலாளர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.