செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி வழியாக பயணிக்கின்றன. குறிப்பாக இரவு 7 மணிக்கு மேல் அதிக எண்ணிக்கையில் ஆம்னி பேருந்துகள் செல்கின்றன. இவ்வாறு செல்லும் பேருந்துகள் உடனடியாக சுங்கச் சாவடியை கடந்து செல்வதில்லை. சுங்கச் சாவடிக்கு முன்பாக நின்று, இருக்கைகள் அனைத்தும் நிரம்பிய பின்னரே பெரும்பாலான பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.
இதனால் சுங்கச் சாவடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போரூர் சுங்கச்சாவடி அருகே பயணிகளை ஏற்றிச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், பேருந்துகளை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நிறுத்தி ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அவ்வழியாக பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அதேபோல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோகிணி திரையரங்கம், மதுரவாயில் மேம்பாலம் அருகே என ஆங்காங்கே ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் கோயம்பேடு முதல் வானகரம் வரை இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர் தற்போது மதுரவாயலில் பறக்கும் சாலை பணி துவங்கப்பட்டுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.