சென்னையில் பிரபல நியூஸ் ஏஜென்சி போட்டோகிராபரின் சடலம் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையாக இருக்கக் கூடும் என்று 5 ஆண்டுகளாக அவருக்கு சம்பள பிரச்னை இருந்து வந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை திருவல்லிக்கேணி நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (56). இவருக்கு திருமணமாகி ஓரு மகள், மகன் ,உள்ளனர். குமார், பிரபல நியூஸ் ஏஜென்சி நிறுவனத்தில் போட்டோகிராபராகவும், மேலாளராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், குமார் வேலை பார்த்து வந்த நியூஸ் ஏஜென்சி நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சம்பளம் தராமல் அலைக்கழித்து வந்ததாகவும், இதனால் குமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகளின் திருமணத்திற்கு பலரிடம் பணம் கேட்டும் கிடைக்காததால் மன அழுத்ததில் இருந்த குமார் நேற்று இரவு நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து நள்ளிரவு அலுவலகத்திற்குச் சென்ற சக ஊழியர் வனமாலை கதவை திறந்து பார்த்தார். அப்போது குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் போலீசார், குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.