செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் இருந்து கிண்டி வரை 400 கிலோ வாட் திறன் கொண்ட உயர் அழுத்த புதைவட மின்சார கேபிள் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நடைபெற்று வரும் பாரிவாக்கம் சென்னீர்குப்பம் குமணன்சாவடி காட்டுப்பாக்கம் போன்ற பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வரும் சூழலில், பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளை முறையாக சமன் செய்து சாலையை சீரமைக்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே மெட்ரோ ரயில் பணி காரணமாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதியடைந்து வரும் நிலையில், மின்சார வாரிய பணி காரணமாக வாகனத்தை இயக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
சென்னை மவுண்ட் சாலை ஐயப்பன்தாங்கல் காட்டுப்பாக்கம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சாலையில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கி நிற்கின்றது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது