தூய்மை பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க சென்னை பெருநகர மாநகராட்சியின் புதிய முயற்சி!

தூய்மை பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க சென்னை பெருநகர மாநகராட்சியின் புதிய முயற்சி!

தூய்மை பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க சென்னை பெருநகர மாநகராட்சியின் புதிய முயற்சி!
Published on

சென்னையை தூய்மையாக்க இரவு பகலாக உழைத்து வரும் தூய்மை பணியாளர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் மிகவும் அதிகம். இதனால் பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அவர்களின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் சென்னை பெருநகர மாநகராட்சி, தனியார் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனி உர்பே சுமித் அலுவலகத்தில், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் உர்பே சுமித் நிறுவனம் (சென்னையில் குப்பைகளை அள்ளும் மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம்) ஆகியவை சார்பில் தூய்மை பணியாளர்கள் மதிய இடைவேளை மற்றும் ஓய்வு நேரத்தில் பொழுதைப் போக்கவும் உற்சாகமாகவும் இருக்க அவர்களுக்கு ஓய்வறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கென தனியாக 2 உணவகங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது‌. அந்த உணவகத்தில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் டீ, காபி மற்றும் பிஸ்கெட் ஆகியவை தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

அத்துடன் அவர்கள் பொழுதைப் போக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் கேரம் போர்டு, செஸ் போர்டு, பல வகையான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், தொடக்க காலத்தில் எப்படி இருந்தது என்பது முதல் தற்போது எப்படி மாறி இருக்கிறது என்பதுவரை, அனைத்தையும் விளக்கும் புகைப்படங்கள் அறை முழுவதும் இடம்பெற்றிருந்தன. ராயபுரத்தின் 7 மண்டலங்களைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் இந்த ஓய்வறை, உணவகம் மற்றும் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் கல்வி மற்றும் மக்கள் தொடர்பு துறை மேலாளர் ஹரிபாலாஜி நம்மிடையே கூறுகையில், “எங்களது நிறுவனத்தில் மொத்தம் 12,000-க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படும் முன்களப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கிட்டதட்ட சென்னையின் 68 சதவீத குப்பைகளை நாங்கள் தினமும் சேகரித்து வருகிறோம்.

குறிப்பாக ஹாட்ஸ்பாட் என்று அழைக்கக்கூடிய குப்பைகள் அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்திகிறோம். மூன்று ஷிப்ட்டாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து நாங்கள் உயர்தர தங்குமறை இலவசமாக வழங்குகிறோம். அத்துடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துகிறோம். அதே நேரத்தில் இரண்டு உயர்தர இலவச உணவகங்கள், மேலும் தூய்மை பணியாளர்கள் மன அழுத்தத்தை போக்க செஸ் போர்டு, கேரம்போர்டு, புத்தகங்கள் வாசிப்பு ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நாங்கள் இப்படி செய்யும்பொழுது, அவர்களின் மன அழுத்தம் குறையுமென எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் பொழுதைப் போக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஓய்வு நேரத்தில் கேரம், செஸ் ஆகியவை விளையாட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நன்றாக வேலை செய்பவர்களை கோவா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு இலவசமாக அழைத்து சென்று சுற்றிக்காட்டுகிறார்கள்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களின் மனம் மகிழ வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தனியார் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சி அனைவரின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com