சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க சென்னை மெட்ரோ வாட்டர் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுபாட்டை போக்க சென்னை மெட்ரோ வாட்டர் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ‘Dail for water 2.0’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி தண்ணீருக்காக மக்கள் காத்திருப்பு காலம் 48 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தத் திட்டத்தின் கீழ் மக்கள் தண்ணீருக்கு பதிவு செய்தால் அவர்களுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்குள் தண்ணீர் அளிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ வாட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை மக்கள் இந்தச் சேவையை இணையத்தின் வாயிலாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ முன்பதிவு செய்ய முடியும். இணைய வழியில் முன்பதிவு செய்பவர்கள் தங்களது வங்கி கணக்குகள் மூலம் பணத்தை செலுத்தலாம். இந்தச் சேவையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் 9000 லிட்டர், 12000 லிட்டர் அல்லது 16000 லிட்டர் என தண்ணீரை முன்பதிவு செய்யலாம். அதேபோல் தனி வீடுகளில் வசிப்பவர்கள் 3000 லிட்டர், 6000 லிட்டர் அல்லது 9000 லிட்டர் மட்டுமே முன்பதிவு செய்யமுடியும்.
மேலும் இச்சேவையின் மூலம் தண்ணீர் ஒரு முறை பெற்றுவிட்டால் அதன்பிறகு 7 நாட்களுக்கு பிறகே மீண்டும் முன்பதிவு செய்யமுடியும். இதன்மூலம் பொது மக்கள் அனைவருக்கும் தண்ணீர் பெற வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொலைபேசி வாயிலாக 3000 லிட்டர் தண்ணீர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இச்சேவையில் முன்பதிவு செய்ய தனித்தனியாக நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவையில் 3000 லிட்டர் தண்ணீருக்கு 400 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல 6000 லிட்டர் தண்ணீருக்கு 475 ரூபாய், 9ஆயிரம் லிட்டருக்கு 700 ரூபாய் என்பன முறையே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ வாட்டர் தெரிவித்துள்ளது.