சென்னையில் பயணிகளின் வசதிக்காக, ஒவ்வொரு இரண்டரை நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவையை அளிக்க மெட்ரோ ரயில் திட்டமிட்டுள்ளது.
சென்னைவாசிகள் தங்கள் அன்றாட போக்குவரத்துக்கு மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்களை போல, மெட்ரோ ரயில்களையும் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தற்போது காலை 8 மணி முதல் 10 மணி மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலான கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு முறையும், பிற நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு முறையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கூட்டநெரிசல் இல்லாத நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ‘பீக் ஹவர்’ எனப்படும் நேரங்களில் ஒவ்வொரு இரண்டரை நிமிடங்களுக்கும் ஒரு ரயில் சேவை அளிக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சேவையை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளில் முனைப்புடன் இயங்கி வருவதாக, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.