சென்னை மெட்ரோ நிலையத்தை சுத்தமாக வைத்திருப்பது பெரும் சவாலாக உள்ளதாக மெட்ரோ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. 4 வழித்தடங்களில் செயல்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவையை பெரிய அளவில் மக்கள் பயன்படுத்தவில்லை என்றாலும் கணிசமான மக்கள் பயன்படுத்தி வருகின்றன. வாகன நெருக்கம் இல்லாமல் சரியான நேரத்திற்கு சென்றடைந்துவிடலாம் என்ற நேர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், கட்டணம் அதிகம் என்ற எதிர்மறை விமர்சனங்களும் இதன்மேல் உண்டு.
இந்நிலையில் சென்னை மெட்ரோ நிலையத்தை சுத்தமாக வைத்திருப்பது பெரும் சவாலாக உள்ளதாக மெட்ரோ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், குடித்துவிட்டு அசுத்தம் செய்தல், சுவர்களின் கிறுக்குவது போன்ற செயல்களால் மெட்ரோ ரயில் நிலையம் அசுத்தம் அடைந்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் அசுத்தம் செய்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 24 ஆயிரத்துக்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய அதிகாரி எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தலுக்கே அதிக அளவில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. தரையில், சுவரில் , படிக்கட்டுகளில் எச்சில் துப்புவதே அதிக அளவில் நடக்கிறது. அசுத்தம் செய்பவர்களை கண்காணிக்க 10 பேர் கொண்ட பறக்கும் படை உருவாக்கியுள்ளோம்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அசுத்தம் செய்தவர்களிடம் இருந்து ரூ.10,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கு ஏற்ப ரூ.50 முதல் 5ஆயிரம் வரை அபராதத்தொகை உள்ளது. அபராதம் விதிக்கப்படும் போது நிறைய பயணிகள் தொகை வைத்திருக்கமாட்டார்கள். அவர்களிடம் இருக்கும் தொகையையே அபராதமாக வசூலிக்கிறோம் என்று தெரிவித்தார்.