தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர வெப்ப அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அதி தீவிர வெப்ப அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.