அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என மேயர் பிரியா மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அங்கு, கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசும்போது, “சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவகிறது. ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும். அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, “அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நேரத்திலிருந்து எப்படி செயல்பட்டு வருகிறதோ, அவ்வாறே இனியும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அம்மா உணவகங்களில் மாமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் நபர்களை உதவி வருவாய் அலுவலர் மூலம் பரிசீலித்து பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
மாமன்றத்தில் அம்மா உணவகம் செயல்பாடுகள் தொடர்பாக கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள் தனசேகரன், ஏழுமலை, ராஜா அன்பழகன் உள்ளிட்டோரின் கேள்விகளுக்கு மேயர் பிரியா பதிலளித்தார்.