மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2,3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், பல்வேறு இடங்கள் வெள்ளநீரில் மூழ்கின. சொல்லப்போனால், சென்னையின் பல்வேறு இடங்கள் தீவுகளைப்போல காட்சியளித்தன.
மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில், இன்னமும் சில இடங்களில் மழைநீர் வடியாததால், மின்சார சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடையும் மக்கள் ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மேயர் பிரியா வீட்டை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட திருவிக நகரில் மேயர் பிரியாவின் வீடு அமைந்துள்ளது. இப்பகுதியில் மழை ஓய்ந்தும் 3 நாட்களாக மின்சார சேவை கிடைக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டனர். “நாங்கள்தானே ஓட்டுப்போட்டு உங்களை மேயர் ஆக்கினோம். எங்களுக்கே மின்சாரம் இல்லை என்றால் எப்படி? மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்” என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த மேயர் பிரியா, “இன்று இரவுக்குள் மின்சார சேவை மீண்டும் வழங்கப்படும். நிலைமை சீர்செய்யப்படும். அனைவருக்கும் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படும்” என்று கூறி மக்களை அமைதியாக்கினார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது. அதை கீழே காணலாம்.