ஆன்லைன் மூலம் வரன் தேடுபவர்களிடம் மணப்பெண்ணாகவோ அல்லது மாப்பிள்ளையாகவோ அறிமுகமாகி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்யும் சம்பவமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் 75 லட்ச ரூபாய் வரை ஏமாந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்தானவர்களுக்கான மேட்ரிமோனியல் மூலமாக தன்னை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பேசியுள்ளார். இவரும் அதை நம்பி அவருடன் பழகத் தொடங்கியுள்ளார். இருவரும் அடிக்கடி வீடியோக் கால் மூலம் பேசி வந்துள்ளனர். அதில் இந்த நபரைப் பற்றிய முழு விவரத்தையும் பெற்றுக்கொண்ட நபர் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் பேசி இவரை நம்ப வைத்துள்ளார்.
அதன் பின் இவரிடம் திருமணத்திற்குப் பிறகு எதிர்கால வாழ்க்கைக்காக ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார். இவரும் அதனை நம்பி அந்த பெண் கூறிய இணையதளத்தின் மூலமாக ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ய ஆரம்பித்ததாகவும், முதலில் 50,000 ரூபாய் பணத்தை முதலீடு செய்து 40 ஆயிரம் ரூபாய் லாபமாக எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நம்பிக்கை வந்ததால் கடந்த மூன்று மாதங்களில் 75 லட்ச ரூபாய் வரை ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ததாகவும், தனக்கு அதில் மூன்றரை கோடி ரூபாய் வரை லாபம் கிடைத்தது போன்று, சம்பந்தப்பட்ட ஆன்லைன் டிரேடிங் இணையதளத்தில் காண்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் முதலீடு செய்த பணத்தில் 50 லட்சம் ரூபாயை எடுக்க முற்பட்டபோது 64 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என அந்தப் பெண் கூறியதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இவர் அப்பெண்ணிடம் எதற்காக பணம் கொடுக்க வேண்டும் என்று காரணம் கேட்டுள்ளார். அப்பெண்ணும் பல்வேறு காரணங்களை கூறி 64 லட்சம் பணத்தை செலுத்தினால் மட்டுமே முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியும் என தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். அந்த டிரேடிங் நிறுவனம் குறித்தும், பெண் குறித்தும் ஆய்வு செய்தபோதுதான், அவர்கள் அனைவரும் மேட்ரிமோனியல் மூலமாக மோசடி செய்யும் கும்பல் என தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேட்ரிமோனியலை பயன்படுத்தி ஆன்லைன் டிரேடிங் மோசடி வலையில் விழ வைத்த கும்பல், முதலில் நம்ப வைப்பதற்கு முதலீடு செய்த பணத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை திரும்பக் கிடைக்கும் வகையில் செய்து பின்னர் மொத்தப் பணத்தையும் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவாகரத்தானவர்களை குறிவைத்து மோசடி நடத்தப்படுவதால் திருமண தகவல் மையம் மூலமாக திருமணத்திற்காக தொடர்பு கொள்பவர்கள் உண்மையாகவே விவகாரத்து செய்துள்ளார்களா? அது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வரன் தேடுமாறு போலீசார் அறிவுறுத்துகின்றனர். மோசடி கும்பலிடம் ஏமாந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால் சைபர் கிரைம் கும்பலை கைது செய்யவும், இழந்த பணத்தை மீட்கவும் வாய்ப்புள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.