தந்தையின் உயிரைக் காக்கும் மருந்தை வாங்குவதற்குச் சென்னையைச் சேர்ந்த இளைஞர் சுமார் 1000 கிலோ மீட்டர் பயணித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இளைஞரான ஜோயல் பின்டோ என்பவரின் தந்தைக்கு நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவரின் நிலைமை மோசமடைந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் டாசிலிஷுமப் என்ற மருந்து கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மருந்து தற்போது கைவசம் இல்லை என்றும், 2 நாட்களுக்குப் பின்னர் வரும் எனவும் கூறியுள்ளனர். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மருந்துக்குத் தட்டுப்பாடு இருப்பதால் கிடைப்பது கடினம் எனத் தெரிவித்துள்ளனர்.
15 நாட்களாகச் சென்னையில் அந்த மருந்து எங்கும் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த ஜோயல், அதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இணையதளம் மூலம் பல்வேறு மருந்தகங்களுக்கும், மருத்துவ டீலர்களுக்கும் போன் செய்து கேட்டுள்ளார். இறுதியாக ஓட்டேரியைச் சேர்ந்த ஒருவர் அந்த மருந்து ஹைதராபாத்தில் கிடைக்கும் என்றும், அதன் விலை 92 ஆயிரம் எனவும் கூறியுள்ளார். அவரசகதியில் பணத்தைக் கொடுக்க முடிவு செய்த ஜோயல், அந்த டீலரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார்.
பின்னர் ஹைதராபாத்தில் மருந்து கிடைக்கும் இடத்திற்கு டீலரின் அறிவுறுத்தலின் பேரில் பயணித்து மருந்தைப் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பியுள்ளார். தந்தையைக் காப்பாற்றுவதற்காக அலைந்து திரிந்த மகன், இறுதியில் 1000 கிலோ மீட்டர் பயணம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோயல் கூறும்போது, தன்னிடம் பணம் இருந்ததால் மருந்தை வாங்கிவிட்டதாகவும், பணம் இல்லாதவர்களின் நிலை சிக்கல் என்றும், எனவே அனைவருக்கும் மருந்து கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.