சென்னை, மதுரவாயல் பகுதியில் ஒரே நாளில் 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பீகாரை சேர்ந்தவர் அம்புஜ்குமார் (24). இவர் மதுரவாயல் கார்த்திகேயன் நகரில் தங்கி, அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்துள்ளனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் அம்புஜின் கை, காலில் வெட்டி விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர்.
இதேபோன்று மதுரவாயல், பல்லவன் நகரை சேர்ந்தவர் சித்தார்த் (22) என்பவரையும் கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்துச்சென்றுள்ளனர். சித்தார்த் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலை முடிந்து வீட்டின் அருகே நடந்து சென்றபோது அதே போன்று பேர் சித்தார்த்தை வழி மறித்து அவரது தலையின் முன்பகுதியில் கத்தியால் வெட்டி விட்டு, அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து சென்றுயுள்ளனர். மேலும் இதேபாணியில் அதே பகுதியில் ஒரு நபரை வழிமறித்து கத்தியால் வெட்டி அவரிடமிருந்து செல்போனையும் பறித்து சென்றனர்.
வெட்டுக்காயம் அடைந்த மூன்று பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் அந்த நபர்களின் அடையாளம் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் நம்பரையும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மதுரவாயல் ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இருசக்கர வாகன எண்ணின் அடிப்படையில் விசாரித்தபோது, கத்தியால் வெட்டி செல்போனை பறித்து சென்றவர்கள் மதுரவாயல், ஆலப்பாக்கம் ஏரிக்கரையை சேர்ந்த சேகர் (25), மணிவண்ணன் (26), சங்கர் (24), என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.