சென்னை ஐஐடியில் இருக்கும் மாணவர்கள் விடுதி, கொரோனா சிகிச்சையளிக்கும் வார்டாக மாற்றப்பட இருக்கிறது.
இதனையடுத்து சென்னை ஐஐடியில் உள்ள விடுதி மாணவர்கள், தங்களது உடைமைகளை இன்னும் ஒரு சில தினங்களில் காலி செய்து கொள்ளுமாறு நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் இருக்கும் மாணவர் விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதால் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஏற்கெனவே சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் வர்த்தக மையம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியையும் கொரோனா வார்டாக மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர் விடுதியும் கொரோனா வார்டாக மாற்றுவதற்கு, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 1,654 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது. எனவே பாதிப்புகளை சமாளிக்க கல்லூரி விடுதிகள், திருமண மண்டபங்களை மாநகராட்சி தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறது.