தமிழகத்தில் முதலாவது மருத்துவமனை தினமான நேற்று சென்னை கஸ்தூரிபா தாய்சேய் நல மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா தாய்சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணிகள் 9 பேருக்கு வளைகாப்புடன் மருத்துவமனை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினத்தை தமிழகம் முழுவதும் மருத்துவமனை தினமாக கொண்டாட உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் கஸ்தூரிபா மருத்துவமனையில் விழா எடுக்கப்பட்டது. 5 வகை சாதம், பட்டாடை, சீர்வரிசை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பால் கர்ப்பிணிகள் நெகிழ்ந்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், “கர்ப்பிணிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக கூறிய சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், pick me செயலி மூலம் கர்ப்பிணிகளுக்கு பெரிதும் உதவும் என்றார். சுக பிரசவத்தை உறுதி செய்யும் வகையில், அரசு சார்பில் அனைத்து மருத்துவமனையிலும் யோகா, மூச்சுப் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
வளைகாப்பு மட்டுமின்றி, சிறப்பு மருத்துவ முகாம், ரத்ததான முகாம், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு என பல்வேறு நிகழ்ச்சிகளும் மருத்துவமனை தினத்துக்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.