“முதல் மனைவி இல்லாவிட்டால் 2வது மனைவி ஓய்வூதியம் பெறலாம்” - உயர்நீதிமன்றம்

“முதல் மனைவி இல்லாவிட்டால் 2வது மனைவி ஓய்வூதியம் பெறலாம்” - உயர்நீதிமன்றம்
“முதல் மனைவி இல்லாவிட்டால் 2வது மனைவி ஓய்வூதியம் பெறலாம்” - உயர்நீதிமன்றம்
Published on

முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமையுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பஞ்சாயத்து யூனியனில் கிராம மருத்துவராகப் பணியாற்றியவர் டாக்டர் சின்னச்சாமி. இவருக்கும் பஞ்சோலை என்பவருக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளன. இதையடுத்து சரோஜினிதேவி என்பவரை சின்னச்சாமி இரண்டாவதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. கடந்த 1997ஆம் ஆண்டு பஞ்சோலை மரணமடைந்தார். சின்னச்சாமி கடந்த 1999ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, தனது குடும்ப ஓய்வூதியத்திற்கு வாரிசாக 2வது மனைவி சரோஜினி தேவியை அவர் நியமித்தார். கடந்த 2009 ஜனவரி 20ல் சின்னச்சாமி மரணமடைந்ததை அடுத்து, தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரி சரோஜினிதேவி, உள்ளாட்சி நிதித்துறையிடம் மனு கொடுத்தார். அரசு ஊழியர்களாக இருந்தால் 2வது மனைவி ஓய்வூதிய பலன்களைப் பெற விதிகளில் இடமில்லை எனக்கூறி அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, தனக்கு கணவரின் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குமாறு உத்தரவிடக்கோரி சரோஜினிதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சின்னச்சாமியின் முதல் மனைவி இறந்துவிட்டதாலும், 34 ஆண்டுகள் மனுதாரரும், சின்னசாமியும் கணவன் - மனைவியாக வாழ்ந்துள்ளதால், அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் முதல் மனைவி விவாகரத்து வாங்கினாலோ அல்லது இறந்துவிட்டாலோ நீண்ட நாட்கள் கணவருடன் வாழ்க்கை நடத்தும் 2வது மனைவிக்கு ஓய்வூதிய பலன்களை தரலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, 2009 ஜனவரி 20 முதல் இதுவரை கணக்கிட்டு, மனுதாரருக்கு 12 வாரங்களில் ஓய்வூதிய தொகையை வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com