மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள், சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு தரப்பு, மாஞ்சோலை மக்களுக்கு மணிமுத்தாறு, நெல்லை பகுதியில் வீடுகள் வழங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், தொழில் தொடங்க கடன்வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது. தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மாஞ்சோலை மக்களை அகற்ற பொருளாதார இழப்பு என காரணம் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறினர்.
தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்தார்கள் என்பதற்காக உரிமைகளை மறுக்க முடியாது எனவும் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ’தலைமுறை தலைமுறையாக வனப்பகுதியில் இருந்தவர்களை, பாம்பே நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள் என்பதற்காக அப்புறப்படுத்தலாமா ’என்று கேள்வி எழுப்பினர். அனைத்து தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.