நாட்டில் சிலர் ஹிஜாப்-காகவும், சிலர் வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முக்கியமா அல்லது மதம் முக்கியமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல்செய்த பொதுநல மனுவில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழைவு வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பல கோயில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நாட்டில் சிலர் ஹிஜாபுக்காகவும், சிலர் கோவில்களில் வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என வினவிய நீதிபதிகள், நாடு முக்கியமா அல்லது மதம் முக்கியமா எனக் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோயிலில் ஆண் பக்தர்கள், மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளதாகவும், இந்து அல்லாதோர் கொடிமரத்தை தாண்டி கோயில்களுக்குள் நுழையத் தடை விதிக்கும் மரபு இன்னும் பல கோயில்களில் அமலில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும், இது மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றது என்றும் தெரிவித்தனர். மேலும் மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், ஆடைக் கட்டுப்பாடு விதிகள் குறித்த ஆதாரங்களை தாக்கல்செய்ய மனுதாரருக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.