பள்ளிக்கு அருகில் மதுபான கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவை மாவட்டம் தென்னம்பாளையத்தில் பொது மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் திறக்கப்பட உள்ளதாகவும், அந்த இடத்திற்கு 50 அடி தூரத்திலேயே பள்ளி அமைந்துள்ளதாகவும், ஆனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தான் அமைக்கவேண்டும் என்ற விதி மீறப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மதுக்கடை அமைக்க ஆட்சேபனை தெரிவித்து கடந்த ஏப்ரல் மாதம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், மதுபானக் கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாதென உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.