நீடிக்கும் இறைச்சி சர்ச்சை : அறிக்கை கேட்கும் நீதிபதிகள்..!

நீடிக்கும் இறைச்சி சர்ச்சை : அறிக்கை கேட்கும் நீதிபதிகள்..!
நீடிக்கும் இறைச்சி சர்ச்சை : அறிக்கை கேட்கும் நீதிபதிகள்..!
Published on

சென்னை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி அழிக்கப்பட்டுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜோத்பூரில் இருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரயில், கடந்த 17-ஆம் தேதி சென்னை எழும்பூர் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலில் அழுகிய இறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்ற உணவு பாதுகாப்புத் துறையினர், பார்சல்கள் வைக்கப்படும் இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் 5-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் 2000 கிலோ இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இறைச்சியின் வால் நீளமாக இருந்ததால் அது நாய்க்கறியாக இருக்குமோ என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்தது. அப்படியானால், சென்னை ஹோட்டல்களில் ரகசியமாக வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே, நாய்க்கறி விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு எழுந்தது. இதனையடுத்து நாய்க்கறியாக இருக்கலாம் என சந்தேகித்த அதிகாரிகள், அவற்றில் சில துண்டுகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற ஆய்வில் கைப்பற்றப்பட்டது ஆட்டு இறைச்சியே என்பது தெரியவந்தது.

இந்நிலையில் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த இறைச்சியின் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட கோரி இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி ஆய்வுக்கு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அது ஆட்டிறைச்சி என்று தெரியவந்ததாகவும் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அதை ஆழமான இடத்தில் புதைத்து அழித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, எந்த விதியின் கீழ் இறைச்சி புதைக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் சென்னை மாநகராட்சியையும் பிரதிவாதியாக சேர்த்து வழக்கு விசாரணையை டிசம்பர் 6 ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com