பிளஸ் டூ தேர்வில் 80 சதவீத மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்றவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதிச் சான்று வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்து, மேற்கிந்திய தீவுகளில் மருத்துவ படிப்பை முடித்த தாமரைச்செல்வன் என்பவர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்ய அனுமதிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அவரது கோரிக்கையை பரிசீலிக்கும்படி கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். அதே நேரத்தில், குறைந்த மதிப்பெண் பெற்று பணபலத்தின் மூலம் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பது குறித்து பதிலளிக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மருத்துவ கவுன்சில், நீட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், ப்ளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களைச் சேர்த்து 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்தது. இந்தியாவில் 90 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் கூட மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை உள்ளதால், வெளிநாட்டு கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வு மதிப்பெண்ணை 80 சதவிகிதமான நிர்ணயிக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். 80 சதவீதத்திற்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு தகுதிச் சான்று வழங்க கூடாது என மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் நீதிபதி உத்தரவிட் டுள்ளார்.