பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ-டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியது மற்றும் சூப்பர் சாட் மூலம் பணம் பெற்றதாக மதன் என்ற யூ-டியூபர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பப்ஜி மதனுக்கு உறுதுணையாக இருந்த அவரின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார். இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா நிவாரண நிதிக்காக பல நபர்களிடம் ரூ. 2.89 கோடி பணம் வசூலித்து, அதை மோசடி செய்து சொகுசு கார்கள், நகைகள் வாங்கியதாக பப்ஜி மதனின் கோடாக் மஹேந்திரா வங்கிக் கணக்கும், கிருத்திகாவின் ஆக்சிஸ் வங்கி கணக்கும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வங்கி கணக்கு முடக்கம் குறித்து முன் கூட்டி தெரிவிக்கவில்லை. குறுகிய காலத்துக்கு தான் முடக்க முடியும், நீண்ட காலத்துக்கு கணக்கை முடக்கி வைப்பது சட்டப்பூர்வ உரிமையை பாதிக்கிறது என கிருத்திகா சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு எதிராக காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ. 1.01 கோடி யாருக்கு சொந்தமானது என்பது சாட்சி விசாரணைக்கு பின் தான் தெரியவரும் என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து புலன் விசாரணை அதிகாரி முன்கூட்டி நோட்டீஸ் அனுப்பினால், அது ஆதாரங்களை அழிக்க வழி வகுத்து விடும். முடக்கம் குறித்து நோட்டீஸ் அளிக்க அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் வங்கிக் கணக்க முடக்கத்தை நீக்க கோரி சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக கிருத்திகாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.