“என்ன நிர்வாகம் நடக்கிறது” -  உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

“என்ன நிர்வாகம் நடக்கிறது” -  உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
“என்ன நிர்வாகம் நடக்கிறது” -  உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
Published on

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுப்பதை தடுக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க செயலாளருக்கு உத்தரவிட போவதாக சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகாவில் உள்ள பிடாரிதங்கல் கிராமத்தில் சட்டவிரோதமாக ஆழ் துளை கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும், இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, குறிப்பிட்ட அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கண்டறிந்தால் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனங்கள், உபகரங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் கூறப்பட்டதை அடுத்து, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரி, பூந்தமல்லி தாசில்தாரர் ஆகியோருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க வேண்டும் என நேற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவு நகல் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கிடைக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் செய்தித்தாள்களை படிக்கமாட்டார்களா? என கேள்வி எழுப்பினர். 

மேலும் உத்தரவு நகல் கிடைக்கவில்லை என அதிகாரி கூறுவது அபத்தமானது என்றும் ஒரு நாளைக்கு 200 லாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுத்து செல்வது காவல்துறை, வருவாய் துறை என எந்த அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா? கேள்வி எழுப்பினர். என்ன நிர்வாகத்தை அரசு நடத்துகிறது என்றும், நீர் மேலாண்மை முழுமையாக செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்காததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை செயலாளருக்கு உத்தரவிடுவதே சரியாக இருக்கும் எனவும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்வதற்கும் உகந்தது எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஏதாவது ஒரு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தால் தான் அதை மற்ற ஆட்சியர்களும், அதிகாரிகளும் தானாக  பின்பற்றுவார்கள் என தெரிவித்தனர். இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பான வழக்குகளிலாவது, அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை மதித்து முறையாக பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து வழக்கை தள்ளிவைத்தனர்.

அப்போது, எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாமெனவும், இனிவரும் காலங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாளை தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிலத்தடி நீர் திருட்டு தடுப்பு நடவடிக்கை குறித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்தும் விளக்கம் கேட்டால், இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுப்போம் என கூறுவது எந்த விதத்தில் உகந்தது என கேள்வி எழுப்பி, தவறிழைக்கும் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென தெரிவித்தனர். பின்னர் உத்தரவு ஏதும் பிறப்பிக்க வேண்டாமென்ற அரசின் கோரிக்கையை நிராகரித்ததுடன், நாளை கட்டாயம் உத்தரவிடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com