காவிரியை விட மெரினா முக்கியமா?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

காவிரியை விட மெரினா முக்கியமா?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

காவிரியை விட மெரினா முக்கியமா?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா..? என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிகோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினா‌ கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மெரினாவில் அரசின் அனுமதியுடன் கடைசியாக எப்போது போராட்டம் நடந்தது என அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு போராட்டத்தை தவிர 2003-ம் ஆண்டிற்கு பின் மெரினாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார். இதையடுத்து, காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்களில் லட்சக்கணக்காண மக்கள் கோவில், தேவாலயங்களில் வழிபாடு செய்கின்றனர். அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனக்கூறி மக்கள் அந்த பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என கூற முடியுமா..? எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், போராட்டங்களை ஒழுங்குப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், போராட்டங்களை தடுக்க அரசுக்கு எந்த அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com