எல்.இ.டி பல்பு, ரேசன் அரிசி வழக்கு: 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

எல்.இ.டி பல்பு, ரேசன் அரிசி வழக்கு: 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
எல்.இ.டி பல்பு, ரேசன் அரிசி வழக்கு: 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
Published on

“தெருவிளக்கிற்காக எல்.இ.டி. பல்புகள் வாங்கியதிலும், ஊரடங்கின்போது ரேசன் அரிசி வழங்கியதிலும் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்கள்“ மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் 6 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில் உள்ள 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தியதில், 500 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்திருந்தார்.


அதேபோல கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால், ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ ரேசன் அரிசி கூடுதலாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் தமிழகத்தில் வழங்கப்பட்டது. மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாக, உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு இயக்குனரிடம் மற்றொரு புகாரை அப்பாவு அளித்திருந்தார்.

இந்த இரு புகார்கள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காமல், தனது புகார்களை பொதுத்துறை செயலருக்கு லஞ்ச ஒழிப்பு துறை அனுப்பி வைத்துள்ளதால், ஆளுநரின் ஒப்புதலை பெற்று வழக்கு பதிய உத்தரவிடக்கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பாவு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018-ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த வழக்குடன் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதையேற்ற நீதிபதிகள், மூன்று வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக கூறி, வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com